Sunday, June 20, 2010

லீ குவான் யூ - ஆசியாவின் ஓர் அழகிய காலக் கணிப்பாளர்.

திரு. லீ குவான் யூ , சிங்கப்பூரின் நிரந்தர அறிவுஜீவி.
தன் கருத்துக்களை எவருக்கும் அஞ்சாது வெளியிடும் இயல்பாளர்.

ஒருங்கிணைந்திருந்த முந்திய மலாயாவின் புழக்கடையாயிருந்த
சிங்கப்பூரை பொருளாதாரப் பொன்னகரமாக உருமாற்றிய உழிகள்
லீயின் விழிகளும் விரல்களும்.
-----------------------------------------

௧௯௯0-ஆம் ஆண்டு நான் முதன்முறையாக சிங்கப்பூர் சென்றதும் யார் இந்த ஊரின் பிரதமர் என்று கேட்டறிந்தேன். பதிலிறுத்த நண்பர்களில் பலர், லீ குவான் யூ என்ற அன்றைய பிரதமரின் பெயரை பாக்தாத் நகரோடு அதன் மக்களின் உள்ளங்களையும் ஒருசேரக் கொள்ளைகொண்ட வரலாற்றுக் கள்வனின் பெயரை அச்சத்துடன் கூறுவதுபோல் மெல்லிய குரலில் "லீ குவான் யூ" என்றனர். மீண்டும் தெளிவாகக் கூறுமாறு நான் கேட்டபோது "லீ" என்று மட்டும் கூறினார். மரியாதை, அச்சம், எச்சரிக்கை, கவனம், கலக்கம் என அனைத்தும் கலந்த விதமாய் மக்கள் திரு. லீ அவர்களின் பெயரைக்கூட கருதுவதன் காரணம் கண்டு வியந்தேன்.

சட்டம், அதைச் செயலாக்கும் விதம், அரசுக்கும் மக்களுக்கும் நடுவில் கட்டாயம் இருக்கவேண்டிய இடைவெளி, இனம், மொழிகளுக்குத் தரவேண்டிய இன்றியமையாமை என்பனவற்றில் பாரபட்சமின்றி ௩௧ அண்டுகள் சிங்கப்பூரை அதன் பிரதமராக வழிநடத்தி, கோ சோக் தாங், தன் மகன் லீ ஹ்சியான் லூங், ஜார்ஜ் இயோ, ஈஸ்வரன், எஸ். ஆர். நாதன் போன்ற பல அரசியல் தலைவர்களை ஆளாக்கியவர் திரு. லீ.

"இந்தியர்கள் நிறைய மிளகாய் உண்பவர்கள். அதனால் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப் படுபவர்கள் உலகில் இந்தியர்களே" - என்று தன் கண்டுபிடிப்பாகக் கூறிய இவருடைய மகனார் லீ ஹிசியான் லூங்கும் இவருக்குப் பின் பிரதமரான திரு. கோ சோக் தாங் அவர்களும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு "கேமொதேரோபி" விளைவாக மொட்டையாயினர். லீ உள்ளத்தில் உள்ளதைப் பேசுபவர்.

இலங்கையின் அதிபர் மகேந்த ராஜபக்சே ஒரு சிங்கள இனவெறியாளர் என்று திரு. லீ எவருக்கும் அஞ்சாமல் கூறியுள்ளார். தமிழின அழிப்பும், தமிழ் மொழி மறைப்பும் இலங்கையில் நிகழ்வதாகக் கூறியுள்ளார். இலங்கையில் இது கனவிலும் நடவாத காரியம் என்றும், மீண்டும் ஒருநாள் தமிழ் இன எழுச்சி மும்மடங்காக மேலெழுந்து பரவத்தான் போகிறது என்றும் கூறியுள்ளார்.

தெற்காசிய நாடுகளின் மூத்த தலைவர்களுள் ஒருவரான திரு. லீ குவான் யூ அவர்களின் தீர்க்க தரிசனம் இலங்கை அரசுக்கு ஓர் எச்சரிக்கை.
இன மொழி மறைப்பால் விளையப்போகும் இலங்கையின் இன்னல்களை உணராது மகேந்த ராஜபக்சேவுக்கு ஆலவட்டம் சுழற்றும் உலகின் எந்த நாட்டின் அரசுக்கும் திரு. லீ குவான் யூ அவர்களின் தொலைநோக்க அரசியலறிவு ஒரு பாடமாக அமையவேண்டும். தமிழ் ஈழத்தில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கும் இன, மொழி அழிப்பு சதித் திட்டங்களை உடனே இலங்கையின் பேரினவாத அரசு நிறுத்திக் கொள்ளுதல் அதன் தேசீய இறையாண்மைக்கு உதவும்.
http://thatstamil.oneindia.in/news/2010/06/05/rajapakse-extremist-singapore-pm-lee-kwan-yew.html

No comments:

Post a Comment