Wednesday, May 19, 2010

THE TAMIL "PASALI" IN JAPAN

தமிழ் நாட்டுப் பசலிக்கீரை டோக்கியோ உணவகத்தினுள் சென்றதெப்படி?

கடந்த 2009 - ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆறாம் தேதி தொடக்கம் பத்து நாட்கள் நான் ஜப்பானில் டோக்கியோ நகரிலிருந்தேன். யூஏனோ பகுதியில் பார்க் சைடு ஹோட்டலில் இருந்த நான், டோக்கியோ நகரை சுற்றிப்பார்க்கும் விருப்பில் ரயிலேறி அகாகுசா புத்தர் திருக்கோயில் சென்று அந்தப் பேரறிவாளனை வணங்கிவிட்டு நேரே டோக்கியோவின் குறுக்காக ஓடும் ஆற்றின் மீதமைந்த பாலத்தின் மீது நின்றவாறு ஆற்றங்கரையோரமாகக் கட்டப்பட்டுள்ள படகுகள் நீரோட்டத்தில் அசைவதைக் கண்டுகளித்தேன். கருமேகம் நிறைந்த நீலவானம். கரும்பச்சை நிறமான ஆற்று நீர். அழகான மக்கள். பொம்மைகள் போன்ற குழந்தைகள். கட்டிளம் பெண்கள். தலைமுடியை வாறாத துடிப்பான பள்ளி மாணவர்கள். வெகுநேரம் என்னை மறந்து எத்தனையோ ஆயிரம் கல் தொலைவிலிருந்து இனிய ஜப்பானைக் கண்குளிரக் காண்பதற்கு அருளிய என் கதிர்காமக் கந்தவேளை மனதில் நன்றி கூறி வணங்கினேன்.

வயிற்றில் பசியெடுத்தது. சாலையைக் கடந்து வரிசையாகத் தென்படும் உணவகங்கள் பலவற்றில் மனம் விரும்பிய ஒன்றினுள் புகுந்தேன். ஒரு வெள்ளை தட்டில் பலவகையான பச்சைக் காய்கறிகளுடன் கூடிய சோற்றுணவு வந்தது. பறிமாறியவள் ஒரு மூதிளம்பெண். என் எதிரே அமர்ந்து ஒரு நடுத்தர வயதுடைய ஜப்பானியர் உணவருந்திக் கொண்டிருந்தார். பலவகையான் பச்சைக் காய்கறி கீரைகளின் நடுவே விசித்திரமான ஒரு கீரையும் இருந்தது. அதன் பெயர் என்ன என்று அந்த ஜப்பானியரை நான் கேட்டேன்.


"பசலி" - என்றார் அவர்.


"உங்கள் ஜப்பான் மொழியில் இதன் பெயரைக் கூறுங்கள்" - என்றேன்.


"பசலி", "பசலி" - என்று இரு முறையும் மிகவும் தெளிவாகக் கூறினார்.


படர்கொடிப் பந்தல் கட்டி வீட்டின் முற்றத்தில் நிழல் தரும் இவர்கொடிப் பசலிக்கொடி கடல் கடந்தும்
சுடரொளி வீசும் செந்தமிழ்ப் பெயர் சிறிதும் வழுவாது பசலி என்றே ஜப்பானியராலும் அறியப்படுகிறதென்றால்
நம் தாய் மொழியாம் தமிழ் மொழி தன் மக்களை மட்டுமின்றி தன் மண்மீது கிளைத்து முளைத்த செடிகொடிகளின் பெயர்களையும் கடல் மலை கடந்த மொழிபெயர் நாடுகளெங்கும் பரவவிட்டுள்ள
மொழிமாண்பினை, தமிழ் மொழியில் வழக்காறு பரவிடும் வல்லாண்மையை, செம்மொழியாகிய அதன்
சீர்த்தியை என் கணங்களை மூடி ஒரு நிமிடம் மெய்சிலிர்க்க வணங்கியவனாக செந்தமிழ் கொடியை ஜப்பான் நாட்டினுள்ளும் பெயர் விளங்கும் வகையில் பரப்பி உடல் வளர்க்கும் உணவாக உதவும் பசலியை உண்டேன்.
தமிழ்ப் பசலி ஜப்பானில் உணவாகி என் உள்ளத்தினுள் தமிழ் உணர்வை உரமூட்டியதை உணர்ந்தேன் நான்.

2 comments:

  1. நேத்துதான் எத்தேச்சையா இந்த கட்டுரைய படிச்சேன்.(http://www.varalaaru.com/Default.asp?articleid=958)"தமிழில் இருந்து வந்ததா ஜப்பானிய மொழி?"
    இன்னிக்கு உங்க post படிச்சவொடனே என்னால நம்பாம இருக்கமுடியல..
    (கொசுறு:நான் இப்பொ ஜப்பான் வந்து ஜப்பானிய மொழிய படிச்சுட்டு இருக்கேன்.)

    ReplyDelete
  2. தற்போது ஜப்பானிலா இருக்கிறீர்கள்?

    ReplyDelete